Sunday, 5 May 2013

ஆண்டாளடி
சிறுகதை


விழித்தவுடன் தகரத்தில் அலைந்து பரவிப்படிந்த புகைச்சித்திரத்தை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பின்னரே தான் சமையல் கட்டில் படுத்திருப்பது முனிக்கு உரைத்தது. சட்டெனெ எழுந்து உட்கார்ந்தான். கைலி அவிழ்ந்திருந்தது. அதுவே இரவு போர்வையானது நியாபகம் வந்தது. பின்மண்டை கனத்து பின் வலித்தது. எழ மனமின்றி அப்படியெ அவிழ்ந்த கைலியுடன், தலையை பின் சரித்து, கைகளை பின்பக்கம் ஊன்றி உட்கார்ந்திருந்தான். வலப்புறம் சமையல் மேடையில் எதுவோ கொதித்த சத்தம் கேட்டது. வெகு நேரம் உறங்கிவிட்டோம் என்ற எண்ணம் அவனுக்கு அயர்ச்சியை தந்தது.செல்வி வாசப்படியில் அமர்ந்து அழகுமயிலுக்கு தலைவாரிக்கொண்டிருந்தாள். பின்மண்டை வலி இப்பொழுது தலை முழுதும் பரவிற்று. எழுந்து வெளியே சென்றால் நன்றாக இருக்கும் எனத்தோன்றவே கைலியை ஒரு கையால் பற்றியபடி, லேசாக உடல் தள்ளாட எழுந்தான். பின் மெதுவாக கைலியை இறுக்க கட்டிக்கொண்டு சமையலறைக்கு அடுத்து உள்ள திறந்தவெளி குளிக்கும் இடத்திற்க்கு வந்தான். அப்படியே தண்ணீர் வாரங்கல் செல்லும் ஓட்டையருகே அமர்ந்து சிறுநீர் கழித்தான்.

வாசலில் சேகர் வந்து செல்வியுடன் பேசுவது காதில் தெளிவற்று விழுந்தது. "மினிஸ்ட்டரு இன்னும் எந்திக்கலையா?" என்றான் சேகர். அதற்கு செல்வி "ஏலேய், குடிச்சுமுடிச்சதும் வீடேறாம, வயக்காட்டுப்பக்கம் அலைவீகளோ?என்றாள். சேகர், ஏக்கா! ஒந்தம்பிதே அழுது, பொழம்பி குடிச்செடத்தவிட்டு எந்திக்க விடமாட்டேம்னுட்டா என்றான். "இவனக் காணலையேனு நைட்டு நெம்ப நேரங்கழிச்சு வெளில வந்து பாக்கேன், இந்தபய வாசல்ல கெடக்கான். இவன ரெண்டு மிதி மிதிச்சு உள்ள கொண்டு போயி போட்றப்ப மணி மூனு தெரிஞ்ச்சிக்க, நீயாவது கதவ தட்டி இவன உள்ள விட்டுட்டு போயிருக்ககூடாது என்றாள் செல்வி. எதுக்கு உங்கிட்ட அன்னியாரத்துல கிழிபெக்கவா? என்ற சேகர், "நானே எப்பிடி வீட்டுக்கு போனேன்னு எனக்கே தெரியாது, மாமெ அனுப்புற சரக்கு அப்பிடி" என்றான். "ஏண்டா, அவுக கைசெலவுக்கு ஆகட்டும்னு அனுப்புற சரக்க புல்லா நீங்களே தூக்குனீகன்னா நா என்னத்த செய்யிரது? சோறு போடுன்னு வந்தான்னா வாரங்கல்ல இருந்துதேன் வாரி போடனும், அவக நாலு அனுப்பினா நீங்களே மூன எடுத்துக்கிடுதீக" என்றாள் செல்வி. சேகர் குளிக்க கொண்டு வந்த துண்டை வாயில் வைத்து கீ கீ என சிரித்தான்.

அழகுமயிலின் இரண்டாவது சடையை பின்னிவிட்டு, சீறுடைக்கேற்ற பச்சைகலர் ரிப்பனை முடிந்தபடி, கொஞ்சம் கம்மிய குரலில் "ஏண்டா, பாபு வீட்டுக்காரி எம்புட்டுக்கு விக்கிதா? என்றாள் செல்வி. சேகர், "பொதுவா எரநூத்தி அம்பதுன்ஙா, நல்ல நாள்னாக்க நானூறு வரைக்கும் கேக்கா" என்றான். செல்வி கண்விரிய "யாத்தீ அம்புட்டாடா? அதேன் மாசம் ஒரு சேல எடுக்குதாலா" என்று சொல்லிவிட்டு, திடமான குரலில் சேகரிடம் "நமக்கெதுக்கு இந்த அநியாய கொள்ள, எரநூரு போதுமே" என்றாள். முனி வெளியே வந்தான். மஞ்ச கலரில் கை வைக்காத, புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் படம் போட்ட பனியனும், அழுக்கேறிய, பலவண்ணக்கலவை கொண்ட கைலியும் கட்டியிருந்தான். சேகரும் ஏறக்குறைய முனியின் உடைபோலவே. பனியன் மட்டும் நீலக்கலரில் நவரச நாயகன் கார்த்திக்கும், பசும்பொன் தேவரும், புலியும், 07 நம்பரும் போட்ட கபடி பனியன். குளிப்பதற்கு துண்டும், லைப்பாயும் கையில் இருந்தது. முனி சேகரைப் பார்த்து இளித்தான். "மினிஸ்ட்டரு பார்லிமென்ட்டுக்கு கிளம்பிட்டாக" என்றான் சேகர் சிரித்தபடி.

பின்னலிடப்பட்ட அழகுமயில் முனியை விலக்கி விட்டு உள்ளே ஓடினாள். ஒருகை ஊன்றி எழுந்த செல்வி சேகரிடம் " இந்தா சேகரு, இவெங்கிட்ட சொல்லிரு, இருக்குறது ஒரு பாட்டிலு. அதையுந் தூக்கிட்டான்ன்னு வையி, அவரு போன் போடுதப்ப சொல்லிருவேன், அவுக சும்மாவே இவெங்கிட்ட மூஞ்சிய காட்டுவாக, சொல்லிட்டேன்" என்றாள். கொடியில் கிடந்த துண்டை உருவி தோளில் போட்டபடி, சேகருடன் மந்தை பக்கம் நடந்தான் முனி. ராஜேந்திரன் டீக்கடையில் வழக்கம் போல் கூட்டமாயிருந்தது. பக்கத்தில் உள்ள வேப்பமரத்தடியிலும் சிலர் கண்ணாடி தம்ளரில் டீ குடித்தபடி இருந்தனர். சிலர் கைகளில், மம்பட்டி இருந்தது. சிலர் சிறிய அறிவாள் வைத்திருந்தனர். அனைவரும் காட்டுப்பக்கம் வேளைக்கு செல்லும் ஆயத்தத்தில் இருந்தனர். கட்டட வேலைகளுக்குச் செல்லும் மேஸ்திரிகளும், சித்தாள்களும் அன்றைய பேப்பரை கையில் வைத்தபடி, பேசிக்கொண்டே வடை சாப்பிட்டனர்.

ராஜேந்திரன் யாரையும் தலைதூக்கி பார்க்காது, அவர்களின் தேவையை காதில் மட்டும் வாங்கிக்கொண்டு காப்பியையும், டீயையும் ஆத்திக்கொடுத்தபடி இருந்தான். அடுத்தவர் டீயோ, காப்பியோ கேக்கும்வரை கொதிக்கும் பாலையே பார்த்துக்கொண்டிருப்பான். தேவையற்ற ஒரு சொல் அவனிடமிருந்து வெளியேராது.  அவன் தலை நிமிர்ந்து முகம் பார்ப்பதே இரவு கடையடைத்து, குப்பி திறந்து, பாட்டிலில் அரைவாசி வயிற்றுக்குள் அடைத்தபின்னரே. பின் கெட்ட வார்த்தையும், பாட்டும், பாசமும், கொஞ்சலும் யாரும் கேட்காமலே அளிக்கப்படும். முனியும், சேகரும் கடைக்குள் நுழைந்தனர். "மாமா ரெண்டு டீ" என்றான் முனி. முகம் பார்க்கமல் டீ அளிக்கப்பட்டது. சேகர் தீவிரமாய் அன்றைய செய்திகளை டீ உறிஞ்சியபடி வாசித்தான். மிலிட்டியிலிருந்து ஒருமாத லீவுக்கு வந்த பாலு சித்தப்பா கடைக்குள் நுழைந்தார். தாடை வழிக்கப்பட்டு, நிறைய பவுடர் அப்பியிருந்தார். முனியை பார்த்து "உங்க மாமனுக்கு இப்போ எங்க கேம்ப்பு என்றார். செகெந்திராபாத்தில சித்தப்பா என்று அவருக்கு பதிலளித்துவிட்டு சேகருடன் மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஊரின் மந்தையே ஊரின் கடைசிப்பகுதி. அதைத்தாண்டிய மேற்கு பகுதி வயலும், வாழையும், தென்னையுமாய் மலையடிவாரம் வரை நீண்டிருந்தது. எதிரே குளித்து முடித்து, களைந்த ஈரதலையுடன் வந்த பட்டப்பாண்டி, ஆண்டாளடியில் மட்டுமே பம்பு ஓடுவதாகவும், கரண்டு போவதற்கு முன் சென்று சேரும்படியும் முனியிடமும், சேகரிடமும் அறிவுறுத்திச் சென்றான். வழியில் ஒரு சிறிய பெட்டிக்கடையில் ராசுவும், அம்மாசியும் சிகெரெட் வாங்கிக்கொண்டிருந்தனர். முனியைக் கண்டதும் இருவரும் சிரித்தனர். முனிக்கு என்னவோ போல் ஆகியது. பதிலுக்கு கொணலாய் சிரித்தபடி ராசுவிடம், "என்ன மாமா இப்பதெ எந்திச்சிகளோ? என்றான். ராசு "என்ன மாப்ள செய்ய? ஒரு லூசுக்கூதி நைட்டு எங்கள கொலையா கொன்னான்ல, பின்ன எப்டி எந்திக்க? என்றான் சிரித்தபடி. சேகரும், அம்மாசியும் கொஞ்சம் சத்தமாய் சிரித்தனர். முனியும் சங்கடமாய் சிரிக்க, நால்வரும் ஆன்டாள் அடி நோக்கி நகர்ந்தனர். முனிக்கு தன்னை நினைக்க நினைக்க கோபமாய் வந்தது. குடிச்சா அழுவுதான்னு குடிக்காம இருந்தவன், கோயம்புத்தூரில் வேலை பார்க்கும், தனக்கு வெலை பார்த்து தருவதாய் சொல்லியிருக்கும் ராசு மாமாவுக்காக கடந்த ஒரு வாரமாய் அவருடன் குடித்தழுதான்.

"குடிச்சா எங்கிட்டுருந்துதான் கண்ணுல தண்ணி வருதுன்னு தெரியல, ரெண்டாவது ரவுண்டுலேய அழுவுததா சொல்லுதாங்ய, அந்த குட்டச்சிறுக்கி ஏந்தேன் என்ன இப்படி படுத்துதாலோ.. இல்ல இவனுவ ஏதாவது அவளப்பத்தி எங்கிட்ட சீண்டி அழுவ வைக்கானுவலா? அவ சரின்னுட்டானா நான் குடிக்கத்தான் போவேனா? அழுவத்தான் செய்வேனா? கீரமுண்ட ஒரு வார்த்த சொல்ல மாட்டேங்கா, நம்மளுக்கு இவள நெனச்சாலே நெஞ்சு பொங்குது, கூடக்குடிக்கிறவனுக நம்மல ஊற்காயாக்கிறானுக" என்று யோசித்தபடியே நடந்தான். ஆண்டாளடி ஊரில் பெரிய கிணறு. வயல் சுற்றியது. ஆழமானது, வற்றாதது. எண்ணெய் செட்டிக்கு சொந்தமானது. நால்வரும் அய்யனார் தாத்தாவின் தென்னந்தோப்பைக் கடந்து ஆண்டாளடியை அடைந்தனர். நிறைய பேர் பேசியபடி, விளையாடியபடி குளித்துக்கொண்டிருந்தனர். மணி எட்டு. ஒன்பது மணிக்கு கரெண்ட் போய்விட்டு மீண்டும் பதினொரு மணிக்கு வரும்.

நால்வரும் தங்களது துண்டையும் சோப்பு டப்பாவையும், கிணற்றை ஒட்டிய பெரிய அரசமரத்தடியில் வைத்து விட்டு, இடப்பக்கம் உள்ள பெரிய கம்மாய் நோக்கி சென்றனர். பெரிய கம்மாய். அதில் ஆங்காங்கே தண்ணீர்க் குழியும், கருவேல மரமும். கம்மாய் முழுக்க காய்ந்த மலக்காடு. எப்போதாவது பெருமழையில் மட்டுமே கம்மாய் நிறையும். கம்மாய் மேட்டில் கருப்பசாமி, குதிரையும் குத்தீட்டியும் கொண்டு அமர்ந்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெருமழை பெய்ததில் கம்மா நிறைந்து தழும்பியது. கம்மாயை ஒட்டிய எளிய சாதிக் குடிசையில் இருந்து மூன்று பிள்ளைகளை உணவாக்கிக்கொண்டு போன பின் நிறையவில்லை.

ராசு வாங்கிவந்த சிகெரெட்டுகளை அனைவரும் ஆளுக்கொன்றாய் பற்ற வைத்துக்கொண்டு ஒரு கருவேலமரத்தை சுற்றி குத்துக்காலிட்டு அமர்ந்தனர். ராசு காறித்துப்பிவிட்டு "என்னா மயித்துக்குடா ஆனா ஊனா அழுவுத? என்றான். "இந்தா மாமா, அதவிடும்" என்றான் முனி. முதலில் உட்கார்ந்த இடத்தில் அதிகம் கழித்து விட்டதால், எழுந்து இடம் மாறி அமர்ந்தான் அம்மாசி. "நீதானப்பா சரக்கு உள்ள போயும் போகாம குட்டச்சி பேர சொல்லி சொல்லி அழுவுத, இப்போ விடும்னா?" என்ற ராசுக்கு பதில் சொல்லாது முனி தள்ளி அமர்ந்தான். பக்கத்தில் இருந்த அம்மாசி முனியின் குறியைப் பார்த்து சிரித்தபடி "ஏண்டா உன்னோடது இவ்ளோ வளைஞ்சிருக்கே, குட்டச்சிக்கு சைடுல படுத்துதேன் பண்ணனும் போலருக்கு" என்றான். சேகர் சத்தம் போட்டு சிரித்தபடி "ஏற்கனவே இவெ யெறங்கி வரனும், இதில இது வேறையா...என்றான். முனி கோபமாக "சுன்னி, பேண்டது போதும், எந்திரிச்சு போ" என்றான். மூவரும் சிரித்தபடி எழ, முனியும் தன் ஜட்டியை கழட்டியபடி தண்ணிப்பக்கம் சென்றான். நாலவரும் மீண்டும் ஆண்டாளடி வர மணி எட்டே முக்கால் ஆகியிருந்தது.

அவசர அவசரமாய் குளித்தனர். குளித்து துவட்டி, துண்டையும் ஜட்டியையும் தண்ணீரில் அலசி பிழிந்துவிட்டு கிளம்பினர். அம்மாசி தன் கிழிந்து, நைந்த ஜட்டியை காய வைக்க தலையில் போட்டுக்கொண்டான். நல்ல பசி அவர்களை பேசவிடாது வேகமாய் நடக்க வைத்தது. முனிக்கு தலைவலி போய், உடல் பரபரப்புடன் இருந்தது. நால்வரும் சாப்பிட்டுவிட்டு ராஜேந்திரனின் டீக்கடையில் கூடும்போது மணி பதினொன்று. அம்மாசி தனது அப்பா, பெரியப்பா, சித்தப்பா அனவருக்கும் பொது சொத்தான தென்னந்தோப்பில், தங்களது முறைக்கான தண்ணீர் பாச்சலுக்கு கிளம்பினான். ராஜபாளையத்தில் ஒரு போட்டொ கடையில் வேலை பார்க்கும் சேகருக்கு அன்று விடுமுறை. எனவே அம்மாசியுடன் மற்ற மூவரும் கிளம்பினர். பெரிய தூக்கு வாளியில் பழையதும் கத்திரிக்காய் கூட்டும் இவர்களது மதிய உணவிற்காக அம்மாசி எடுத்து வந்தான். பேசியபடியே நடந்தனர். தென்னங்காடு, ஆண்டாளடியை கடந்து கம்மாய் கடந்து இடப்பக்கம் அரை மைல் தூரத்தில் இருந்தது.

நால்வரும் பேசியபடி ஆண்டாளடியை ஒட்டிய வயலின் வரப்புகளில் ஒருவர் பின் ஒருவராய் கடக்கையில், குட்டமுத்து மற்றும் குட்டச்சி என்றழைக்கப்படும் முத்துச்செல்வி துணியை, வாளியில் பம்புத்தொட்டியிலிருந்து மொள்ளப்பட்ட தண்ணீரில் முக்கிக்கொண்டிருந்தாள். வேறு யாரும் இல்லை. அம்மாசி "ஏலேய் முனி, ஓ ஆளு இருக்காடோய்" என்றான். சட்டென நெஞ்சுக்குள் உடைந்த சந்தோசத்துடன் பார்த்தான் முனி. ஆம்பிளைகள் போடும் ஒரு சிவப்பு அரைக்கை சட்டையும், இடுப்பில் ஏற்றிச் சொருகிய கருநீல பாவாடையும் உடுத்திய மூனரை அடி முத்துச்செல்வி அவனுக்குள் சொல்லொனா உணர்ச்சிகளை தந்தாள். புன்முறுவலுடன் அவளை அவர்கள் கடந்தனர். முனி கடைசியாய், மெதுவாக கடந்தான். அவள் தலை நிமிர்த்தாது துணியை ஊற வைத்துக்கொண்டிருந்தாள். கற்றையான தலைமுடியை கொண்டையிட்டிருந்தாள். பாவாடை பாதி நனைந்திருந்தது. முனி அவளை கடக்கும் போது சற்று நின்று கைலியை மடித்துக்கட்டியபடி ஆசையாய் ஒருமுறை உற்றுப்பார்த்தான். வெளுத்த அவள் நிறத்தில் மேலும் வெள்ளையாய் கழுத்தில் சிறு தேமல்கள் ஏனோ அவனுக்கு ஒரு கிளர்ச்சியை தந்தது. முதலில் சென்ற அம்மாசி திரும்பி "என்னடா தொவச்சி குடுத்துட்டு வர்றியா, நாங்க முன்னாடி போறோம் என்றான். முத்து பெறிய கண்களை உயர்த்தி பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டாள். முனி சைகையால் அம்மாசியின் வாயை மூடச்சொன்னான்.

ஆண்டாளடி தாண்டி கம்மாய்க்குள் இறங்கியது முனி முன்னாடி ஓடிச்சென்று அம்மாசியின் முதுகில் ஓங்கி அறைந்தான். அம்மாசி முனியின் அடுத்த அடிக்கு விலகி ஓடினான். நால்வரும் சிரித்து ஓடியபடி தென்னங்காடு வந்தனர். பரந்து விரிந்த தென்னங்காட்டின் நடுவில் ஒரு மேட்டில் மாமரமும், கிணறும், பம்புசெட் ரூமும், பம்புத் தொட்டியும் இருந்தது. கிணற்றின் வலப்பக்க மூலையில் நான்கு பப்பாளி மரமும், ஒரு நெல்லி மரமும் இருந்தன. வெயில் ஏறினாலும் காற்றில் கொஞ்சம் குளிர்ச்சி இருந்தது. தென்னைக்கு அடுத்து நிறைய பனை நின்றிருந்தது. ஆங்காங்கே கிடந்த தென்னையோலைப் பாயை எடுத்து வந்து மாமரத்தின் அடியில் போட்டான் சேகர். ராசு அதை ஒழுங்குப்படுத்த மூவரும் அதில் அமர்ந்தனர்.

அம்மாசி பம்பு செட்டு அறைக்கு சென்று மோட்டாரை இயக்கினான். காட்டின் அமைதியை கிழித்தபடி, மோசமான கிரீச்சலுடன் கூடிய டப டபவென்ற சத்ததுடன் மோட்டார் உயிர் பெற, தொட்டியில் உள்ள பம்பு அதிர்ந்து, பின் குலுங்கி யாரும் எதிபார்க்காத ஒரு கணத்தில் தொப தொபவென தண்ணீரை கொட்டியது. தொட்டியிலிருந்து கொட்டிய நீர், வரப்பின் ஒழுங்குப்படுத்தப்பட்ட பாதையில் சிதறிக்கிடந்த சருகுகளை ஓட்டியவண்ணம் தென்னெங்காட்டில் புகுந்தது. அம்மாசி பம்புசெட் அறையிலிருந்த மம்பட்டியை எடுத்துக்கொண்டு தண்ணீரை பின் தொடர்ந்து தென்னைக்குள் மறைந்தான். இவர்கள் ஆளுக்கொரு சிகரெட்டை பற்ற வைத்தனர்.
ராசு கோயம்புத்தூரின் வணிக உலகைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். சேகருக்கு அதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு கேட்டுக்கொண்டிருந்தான்.

முனியின் மனம் ஆண்டாளடியில் உள்ள தண்ணீர் வாளியில் ஆடைகளுடன் அமிழ்ந்து அமிழ்ந்து மேலே வந்தது. அவனுக்குள் ஒருவித ஏக்கம் ஊறியபடியே இருந்தது. மூன்று வருடம் முன்பு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதியிலிருந்து முத்துவை அவன் விரும்ப ஆரம்பித்தான். யாரும் அவனுக்கு போட்டியில்லை. பத்தாவது படிக்கும் முத்து மிகவும் குட்டை. ஆனால் ஊரில் இல்லாத வெளுப்பு. பளுத்தி என்றழைக்கப்பட்டவளே பின் குட்டச்சியானாள். முனி அவள் கண்களில் மயங்கினான். பெரிய, விரிந்த ஆச்சரியமான கண்கள் அவளுக்கு. தாமதமாய் பள்ளி வந்த தினமொன்றில், அவள் வகுப்பிற்கெதிரே முட்டி போட்ட பொழுது, ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்த முத்து, அதன் வழியாக இவனை உற்றுப்பார்த்தாள். அந்த விரிந்த கண்ணில் அகப்பட்டான் முனி. கோயம்புத்தூர் போவதற்க்கு முன் எப்படியாவது ஒருமுறை அவளின் நினைப்பை அறிய வேண்டும் என் எண்ணிக்கொண்டான். ஆனால் முனிக்கு கொஞ்சம் இந்த விசயத்தில் பயமிருந்தது. முத்துவின் ஆத்தா அப்படி. இடம் பொருள் ஏவலின்றி சண்டையிடுபவள். நடு ரோட்டிற்க்கு வந்துதான் பேச்சை துவங்குவாள்.

முன்பு இவன் பன்னிரென்டு முடித்து பாலிடெக்கினிக் போன சமயம் ஒரு முறையும், அவள் பத்தாவது பெயிலான சமயம் ஒரு முறையுமாக அவளிடம் பேச முற்பட, அவள் நில்லாது ஓட, இவன் அவள் அம்மாவை எதிபார்த்து வாசலை நோகியபடி, பயந்து காத்திருந்தான். வராதது பூதத்தான் புண்ணியம். எதையும் அடக்கி வைக்க தெரியாத முனி, சமயம் கிடைக்கும் போது அழுதபடி வெளியே கொட்டுவான். இதனாலேயெ அழுமுனி என்ற பட்ட பெயர் பிரபலமாகவிடினும் அவனுக்கு சூட்டப்பட்டது.

அம்மாசி திரும்பி வரும்போது உடன் பனையேறி முருகனும் ஒரு பிளஸ்ட்டிக் குடத்துடன் வந்தான். ராசுவும், சேகரும் உற்சாகத்தில் கூவினர். குடத்தை அவர்கள் பக்கத்தில் வைத்துவிட்டு பம்பில் குளிக்கப்போனான் முருகன். குடம் கள்நுரை ததும்பி வழிந்தது. அதன் மனம் நால்வரையும் வசியப்படுத்தியது. அம்மாசி கையில் பனையோலை இருந்தது. அதனை விரித்து முனையில் ஒரு முடிச்சிட்டு பாத்திரமாக்கினான். பின் முனி தவிர அவர்கள் அனைவரும் அதில் குடத்தை கவிழ்த்து கவிழ்த்து கள்ளருந்தத் தொடங்கினர். முனிக்கு எச்சில் ஊறியது. நெஞ்சு திடீரெனெ தாகத்தில் அடைத்தது. இருப்பினும் கட்டுப்படுத்துக்கொண்டு கிணற்றை பார்த்தவண்ணம் திரும்பி அமர்ந்தான்.

அவர்கள் கள் மிடறும் ஓசை கேட்டவண்ணம் இருந்தது. பொளேரென பொடனியில் அடிவிழ திடுக்கிட்டு திரும்பினான். ராசு "ஒம்படத்த இங்க ஓட்டாம வந்த்து குடி என்றான். முனி முகம் சுருங்க "வேண்டாம் மாமா" என்றான். ராசு "நொட்டி, கூப்புடுறேன்ல, வாலா என்றான். ராசு பேச்சை முனி தட்ட இயலாது மட்டுமல்லாமல், அவர்கள் கூப்பிட வேண்டுமே என்ற எண்ணம் தனக்கு இருந்தமையால் குடத்தின் அருகில் குத்துக்காலிட்டு குடிக்கத்தொடங்கினான். பனங்கள் புளிப்பும், இனிப்பும் கொண்டு சுர்ரென்றிருந்தது. பாதி குடம் காலியாக, அவர்களுக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. ராசுவும், சேகரும் எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தனர். அனைவருக்கும் பின் ராசுவால் சிகெரெட் வழங்கப்பட்டது. முனி ஒரு பெருத்த ஏப்பத்தை வெளியேற்றி பின் சிகரெட்டை பற்ற வைத்தான். மனம் இலகுவாகியது. பின் கனிந்தது. சிகரெட் புகையை உள்ளிழுக்கையில் முத்துவின் நினைவு அவனுள் ஆழமாய் உள்ளிறங்கியது. முனி பனையோலையில் கள் நிரப்பி அருந்தினான்.

மிதமான போதை கொஞ்சம் மேலேற வெட்கம் கீழிறங்கியது. ராசுவிடம் திரும்பி "என்ன பொட்டபயன்னு நெனைக்காத மாமா. அழுதா நா பொட்டையா? சொல்லு? இது காதல் மாமா காதல். காதல் ஏக்கம்" என்றான். அம்மாசி "பின்ன அவகிட்ட போயி சொல்ல வேண்டியதுதான, அவகிட்ட சொல்லு, இல்ல அவங்காத்தாட்ட சொல்லு" என்றான். முனி அம்மாசியை பாதிக் கண்களால் உற்றுப்பார்த்தான். "அம்மாசி, அவ ஒன்னும் வாடின்னா வந்து படுக்குத வேணியுங் கெடையாது, நானும் ஓட்ட இருந்தா போதும்னு அலையுத அம்மாசியுங் கெடையாது" என்றான். அம்மாசி சிரித்துக்கொண்டே "போடா மயிரு, உனக்கு என்னடா தெரியு அவளப்பத்தி, அவ நான் கூப்டா மட்டுந்தே வர்ரா தெரியுமா?" என்றான். சேகரு ராசுவிடம் "நீ போன தடவ வரும் போதே இவெ என்ன சொன்னயா? எப்படியும் அவகிட்ட கேட்ருதெ மாமான்னியா. இப்ப வரைக்கும் கேக்கல. அவ வெளிக்கு போம்போதும் குண்டி பின்னாடியே போறானே ஒழிய கேக்க மாட்டேங்கியான். அவளும் இத்துணூன்டு இருந்துகிட்டு ஆடு ஆட்டிக்கிட்டு நடக்குதமாறி இவெ முன்னாடியே அங்கிட்டும், இங்கிட்டும் திரியிராலே ஒழிய நிமிந்து பாக்க மாட்டேங்கா" என்றான்.

முனி "மாமா சொல்லிருவே மாமா, ஆனா அவங்காத்தால பத்திதே உமக்கு தெரியாதா? என்னத்தயாவது வீட்டு முன்னடி வந்து கத்திவிட்ருவாளோன்னுதான் யோஸ்த்து பாக்கேன்" என்றான். பேச்சு தடைபட மீதமிருந்த கள்ளு காரணமாயிருந்தது. நால்வரும் மாறி மாறி ஏப்பம் விட்டனர். முனி லேசாக சினுங்கினான். ராசு "ஒருத்தனுக்கு தண்ணியப்போட்டும் தைரியம் வரலன்னா அவெ சுன்னிய வெட்டிக்கிட்டுதே சுத்தனும்" என்றான். மாமா தைரியத்துக்கு என்ன கொறவு, மாட்டேம்னானா முண்டைய தூக்கிபோட்டு மிதிச்சிடுவே" என்றான் முனி கண்ணை துடைத்தபடி. அம்மாசி எதையும் கவனியாது காலியான குடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பின் மெதுவாக எழுந்து குளித்து முடித்து வேட்டியை துவைத்துக்கொண்டிருந்த்த முருகனிடம் சென்றான். "இங்க பாருடா, அவ ஆத்தாகாரிக்கு பயப்படாத, இவ போயி சொன்னாதான அவ வருவா, இவள அமுக்கிபோடு, ஏத்தா ஆட்டம்ன்றியா இல்ல மாட்டம்ன்றியானு கேளு, மாட்டம்ன்டான்னு வையி, குட்டச்சிய அங்கயே செஞ்சிவிட்டு வந்துரு, என்னா செய்வாளுக "என்றான் ராசு மெதுவாக. முருகனும், அம்மாசியும் வந்து குடத்தை எடுத்துக்கொண்டு சென்றனர். சேகர் பாதி தரையுலயும், பாதி தென்னையோலையுலும் படுத்தான். "அங்கிட்டு போ மாமா, என்னத்தய்யாவது சொல்லிகிட்டு என்று இளித்தான் முனி.

ராசு உக்கார்ந்தவாரே பிருஸ்ட்டத்தை தேய்த்து தேய்த்து முனிக்கு நெருக்கமாக வந்து "உனக்கு வளைஞ்சது நிமிராதா? சீரியசா சொல்லுதே, தப்புன்னு நினைக்காத, அவ வேணுமின்டா எதையுஞ் செய்யனும், நீ தப்புப்பன்றியா இல்லயாங்கிறது இங்க யாருக்கும் முக்கியமில்ல, நீ செஞ்சது தப்புனு சொல்லுதானுகன்னு வையி நீ மன்னிப்பு கேப்பியா இல்லயாங்கிறதுதே அவனுவலுக்கு முக்கியம். தெரியாம செஞ்சி போட்டேன்னு சொன்னா போரும், உனக்கு கட்டு வச்சிர மாட்டானுவலா என்றான். முனிக்கு போதையின் உச்சத்தில் ராசுவின் வார்த்தை அவனது முகத்தை விட தெளிவாக பதிந்தது. முருகனும் அம்மாசியும் அரைக்குடம் கள்ளுடன் வந்தனர். எதையோ சாதித்துவிட்ட தொனியில் சிரித்தபடி குடத்தை வைத்தான்.

ராசு தலை தூக்கி அம்மாசியை பார்க்க முயன்று முடியாமல் வலப்பக்கமாய் தொங்கப்போட்டான். முனி பனைமட்டையில் இருந்த முசுரை தட்டிவிட்டு கள்ளுற்றிக்கொண்டான். அம்மாசி ராசுவிடம் "என்ன அழுவுதானா" என்றான் சிரித்தபடி. "போடா புடுங்கி" என வெறியேறிய கண்களுடன் கத்தினான் முனி. அம்மாசி சிரித்துக்கொண்டே இருந்த்தான். ராசு எதையும் பேசவில்லை. கள்ளை குடித்து விட்டு, இரு கையூன்றி எழுந்து கம்மாய் நோக்கி சென்றான் முனி. யாரும் அவனை கவனிக்கும் நிலையில் இல்லை. முருகனும், அம்மாசியும் கள்ளூற்றத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் நடப்பதற்கு கஸ்டமாக இருந்த்தது பின் இயக்கிவிட்ட இயந்திரம் போல் கால் வளைந்து நடக்கத் தொடங்கியது முனிக்கு. தன்னை வேறொருவனா எண்ண ஆரம்பித்தான். உயரமாக, பலமானவனாக, எதற்க்கும் அஞ்சாதவனாக கற்பனை செய்து, அது போலவே நெஞ்சை நிமிர்த்தி நடக்க முயன்றான். பின் தான் அப்படிப்பட்டவேனே என அவனுக்குத் தோன்றியது. மற்றவர்களுக்காக இதுவரை விட்டு கொடுத்து வந்திருக்கிறோம் என திடமாக அவனுக்குள் தோன்றியது. கையை கொஞ்சம் அங்கிட்டும் இங்கிட்டும் வீசிக்கொண்டான். தன் உடல் பெரும்பலம் கொண்டதாக தோன்றியது. இப்பொழுது யாரேனும் தன்னிடம் பிரச்சனை செய்தால் அவர்களின் கதி பற்றிய எண்ணம் வந்து போனது. உயர்ந்த கம்மாயின் கரையேர இரண்டுமுறை முயற்சித்து மூன்றாம் முறை முன் பக்கம் கையூன்றி கரை ஏறினான்.

ஏறி நிமிர்ந்தால் கருப்பசாமி கோயில் இருந்தது. கால்கள் கொஞ்சம் தள்ளாட நடப்பட்டிருந்த ஏட்டியை தாங்கி பிடித்தபடி கருப்பசாமியை பார்த்தான். தலையில் கிரீடமும், அகன்ற நெற்றியும், உருட்டு விழிகளும், கெடா மீசையும், அகன்ற மார்பும் கொண்டு இடக்காலை பின் வைத்து, வலக்காலை முன்வைத்து நீண்ட அறிவாளை உயர்த்தி புறப்பட்ட வண்ணம் இருந்தார். அவர்முன் முன்னிரு காலை தூக்கி காற்றில் அலையவிட்டபடி குதிரை காத்திருந்தது. கருப்ப சாமி எங்கே போவார் என் யோசித்தான். அவரும் முத்துவிடும் போவாரோ என் எண்ணியவன், சட்டெனெ தன்னை கருப்பசாமியாக்கிக்கொண்டான். கள்ளிறங்கியதைபோல் போல் அல்லாமல் கருப்பசாமி சடாரென அவனுக்குள் இறங்கினார். இறுக்கி பல்லை கடித்தபடி "கோட்டிமுண்ட.." என்று சொல்லி விட்டு தவறும் காலை பொருட்படுத்தாது வேகமாக நடந்தான்.

வரப்பில் நடக்க முடியாமல் வயலுக்குள் ஒரு காலும், வரப்பில் ஒருகாலும் மாறி மாறி வைத்தபடி சேரான காலுடன் ஆண்டாளடி வந்தான். பம்புதொட்டியில் முத்து உட்கார்ந்திருந்தாள். இவன் வருவதை தொலைவில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆலமரத்தடி வந்தவன் சட்டெனெ நின்று அவளைப்பார்த்தான். வேறு யாரும் இல்லை. துவைத்த துணி பிழியப்பட்டு, சுருட்டி வாளி நிரம்ப வைக்கப்பட்டிருந்தது. மெதுவாக அருகில் போனான்.

அவன் அருகில் வருதைக்கண்டு பம்புதொட்டி மேடையிலிருந்து கீழே இறங்கி இவனுக்கு எதிர்திசையில் நடக்க போனவளை "ஏத்தா நில்லு" என்றான் முனி. அவன் வார்த்தைகளை கேட்ட அதிர்வில் சற்று தயங்கி பின் தொடரப்போனவளை "ஏத்தா நில்லுங்கேன்ல" என்று அதட்டினான். அவள் நின்று மெதுவாக திரும்பி நன்றாக தலை தூக்கி அவனைப் பார்த்தாள். அவள் பெரிய கணகள் மேலும் விரிந்தது. அதில் எந்த பயமும் இல்லை என்பதை கண்டான். அவளின் முகம் சாதரனமாக இருந்தது அவனுக்கு அவமானமாகப்பட்டது. போதையாலும், கோபத்தாலும் சிவந்து சரிந்த கண்களைக்கொண்டு அவளை உற்றுப்பார்த்தான்.

அவள் மெதுவாக அந்த இடத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு மீண்டும் அவனைப்பார்த்தாள். அவனுக்கு என்ன பேசுவதென்று தெரியாமல், லேசாக ஆடிக்கொண்டே வார்த்தைகளை வெளியேற்ற முயற்ச்சித்தான். எதுவும் வரவில்லை. என்ன கேட்ப்பது என்று தெரியவில்லை. அந்த யோசிப்பில் அவன் கருப்பசாமியை தவரவிட்டான். குலைந்த தணிந்த குரலில் "ஏத்தா என்ன விரும்புதியா?" என்றான். அவள் பேசாது தலை குனிந்தாள். இவனுக்கு திடீரென அழுகை பொங்கியது. லேசாக கேவியபடி "ஏத்தா விரும்புதியா இல்லையா? என்றான். அவள். "விரும்புதேன் இப்பொ போவும்" என்றாள். அவனுக்கு அவள் சொல்லியது சரியாக புரியவில்லை. "ஙே..என்னத்தா? என்றான். அவள் மறுபடியும் "விரும்புதேன்" என்றாள். இவனுக்கு வார்த்தை விளங்கி விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான். "இப்போ போவும்.. எங்கம்ம வருவா" என்றாள். அவனுக்கு எதுவுமே விளங்காது அவளை பார்த்தபடி பிரம்மை பிடித்தவன் போல் நின்றான். அவள் சட்டெனெ கோபத்துடன் "போவும்னு சொல்லுதேன்ல” என்று முகம் சுருக்க சொல்லிவிட்டு பம்பு செட் மேடைக்கு போய் உட்கார்ந்துகொண்டாள். முனி மெதுவாக திரும்பி, கோணலாய் இளித்தபடி தள்ளாடி தள்ளாடி நடந்து சென்றான்.

No comments:

Post a Comment